"வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வருமானவரி கிடையாது" மத்திய நிதி அமைச்சர் விளக்கம்
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்றும், ஆனால், அந்த வருமானத்தில் இங்கு வாங்கும் சொத்தின் வருமானத்துக்கு வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், வெளிநாடுகளில் பணியாற்றியவாறோ, சொந்தமாக தொழில் நடத்தியவாறோ அங்கேயே வாழும் இந்தியர்களின் வருமானத்தின் மீதான வரிவிதிப்பு தொடர்பான தெளிவான விளக்கம் இடம்பெறவில்லை என்ற கருத்து எழுந்ததால் குழப்பநிலை நீடித்தது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று உறுதிபடக் கூறினார்.
அதேவேளையில், வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில், சொந்த ஊரில் சொத்துக்கள் வாங்கி, அதன்மூலம் வருமானம் கிடைத்தால், அதற்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார்.
Comments